ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து ஸ்மார்ட் டிவி சாதனங்கள் தற்பொழுது இந்திய சந்தையை ஆட்டி படைக்க துவங்கி இருக்கின்றன. செல்போன் போல 'டிவி'யிலேயே இணைய வசதி எனும் தொழில்நுட்பத்தால், கேபிள் இணைப்பு கூட தேவை இல்லை எனும் நிலையை எட்டி இருக்கிறோம்.
என்றாலும் இவ்வகை அதி நவீன தொழில் நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வும் நமக்கு தேவை படுகிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை கூறலாம்.
கேரளாவின் கோழிக்கோட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மனைவியுடன் தங்கள் வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி வழியாக வீடியோ கால் பேசுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்த கணவரின் செல்போனில் மனைவி உடைமாற்றும் படுக்கையறை காட்சிகள் தானாக ஒளிபரப்பாக துவங்கி இருக்கிறது. இதனால் 'தனது வீட்டில் யாரும் ரகசிய கேமரா வைத்து விட்டார்களோ?' என பதறியடித்துகேரளா திரும்பி இருக்கிறார்.
காவல் நிலையத்திலும் இது குறித்து அவர் புகார் அளித்த நிலையில், ரகசிய கேமரா சோதனையில் சிக்கியது அவர்கள் வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி. கணவருடன் வீடியோ கால் பேசிவிட்டு, கேமராவை அவர் துண்டிக்காமல் விட்டதே, வீடியோ கால் பேசாத சமயத்திலும், வீட்டு காட்சிகள் கணவரின் போனில் ஒளிபரப்பாக காரணமாக இருந்துள்ளது.
இதுவே கணவர் அல்லாத வேறு ஒருவருடன், எவரேனும் பேச நேரிட்டு இந்த சம்பவம் நிகழ்ந்தேறி இருந்தால் குடும்ப மானமே பறி போய் இருக்கும். எனவே இவ்வித சாதனங்களை உபயோகிக்கும் போது கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே..
Social Plugin