Tuesday, 10 September 2019

சுத்தத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம்!!! மதுரை மீனாட்சி அம்மனுக்கு கிடைத்த பெருமை...!


சுத்தம், சுகாதாரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்திய அளவில் இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது. யூனியன் ஜல் சக்தி அமைப்பின் சார்பில் வருடம் தோறும், சுத்தத்தில் சிறந்து விளங்கும் 10 புகழ் பெற்ற இடங்கள், சுற்றுலா தளங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் 2ம் இடம் பிடித்து ஒட்டுமொத்த தமிழகத்தும் பெருமை தேடி தந்திருக்கிறது.

இதற்கான விருதினை யூனியன் ஜல் சக்தி அமைப்பின் 'ஜேந்திர சிங்க்' அவர்களிடம் பெற்ற மதுரை மாநகராட்சி ஆணையரான விசாகன், இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்த தாங்கள் எடுத்த முயற்சிகள் குறித்தும் பேசி இருந்தார்.


50 மீட்டர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்கென தனித்தனி குப்பை தொட்டிகள், கோவில் வளாகத்தினுள் 100% பிளாஸ்டிக்கை ஒழிக்க கடும் நடவடிக்கைகள்.

குப்பைகளை சேரவிடாது அப்புறப்படுத்த தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடும் 4 குப்பை வண்டிகள், 24 மணி நேரமும் தயார் நிலையில் துப்புரவு பணியாளர்கள், 25 E-டாய்லெட்டுகள், 15 குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் என வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி அம்மன் ஆலயத்தை பேணி பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே மீனாட்சியம்மன் கோவில், கடந்த 2017ம் ஆண்டு சுத்தத்திற்கான முதல் இடத்தை இந்திய அளவில் பிடித்து சாதனை படைத்தது. துரதிஷ்டவசமாக 2018ம் ஆண்டில் இந்த பட்டியலில் இடம்பெறாத இவ்வாலயம், இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்து பெருமை தேடி தந்திருக்கிறது.
Disqus Comments
'