Sunday, 15 September 2019

ஒரே லட்டு 17,50,000 ரூபாய்...! தெலுங்கானாவை கலக்கும் ஸ்பெஷல் லட்டு


தெலுங்கானாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட ஒரு லட்டு 17.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள பாலாப்பூர் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் விநாயக சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதிலும் இங்கே இருக்கும் 20 அடி விநாயகர் சிலை அப்பகுதியில் மிகப்பிரபலம்.


மேலும் எந்த பகுதியிலும் இல்லாத வழக்கமாக, இங்கே ராட்சத விநாயகர் சிலைக்கு விநாயக சதுர்த்தி அன்று ராட்சத லட்டு படைக்கப்படுவது வழக்கம். அப்படி படைக்கப்படும் லட்டுவை வாங்க இப்பகுதி மக்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.


இந்நிலையில் இந்தாண்டு விநாயக சதுர்த்தியை ஒட்டி சுமார் 21 கிலோ எடை உடைய லட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின்னர் ஏலம் விடப்பட்ட நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயி கோலன் ராம் என்பவர் 17.5 லட்ச ரூபாய்க்கு அதனை வாங்கி இருந்தார்.

இப்படிப்பட்ட சிறப்பு மிக்க பாலாபூர் விநாயகர் லட்டை வாங்குபவர்களின் தொழில் பல மடங்கு வளர்ச்சி அடையும், செல்வம் கொழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருவதே இந்த விலைக்கும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.


Disqus Comments
'