Thursday, 3 October 2019

எல்லா ஆவணமும் இருக்கா..? அப்போ 100 ரூபா கொடுத்துட்டு போ... வீடியோவில் சிக்கிய காவல் துறை


போக்குவரத்து விதிகள் மக்களை திருத்தும் நோக்கில் இல்லாமல் பணம் பறிக்கும் நோக்கில் இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

'ஹெல்மெட் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை' என ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கும் காவல் துறையினர் 'மக்கள் நலன் இருந்தால் அந்த காசில் பாதியை, புது ஹெல்மெட் வாங்கவோ, இன்சூரன்ஸ் போட்டு கொடுக்கவோ பயன்படுத்தி இருக்கலாம்' என்கிற கருத்தும் இதனை உறுதி படுத்த மக்களால் முன்வைக்கப்படுகிறது.

இது போதாதென்று அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், 100 கொடு 200 கொடு என அடாவடியாக கேட்டுவாங்கும் போலீசார் செய்யும் கொடுமை அதற்கும் மேல்.

அப்படியொரு கொடுமையை கேரள வாலிபர்கள், தமிழக போலீசாரால் சந்திக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் காருண்யா காவல் நிலையத்தை சேர்ந்தவர் என கூறப்படும் போலீசார் ஒருவர்,

இரு சக்கர வாகனங்களில், ஊர் சுற்றி பார்க்கும் கேரள வாலிபர்கள் 12 பேரை வழிமறித்து ஆவணங்களை சரி பார்க்கிறார். அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில், 'பின்னால் இருந்தவர்கள் ஹெல்மெட் அணியவில்லை அதனால் பைக்குக்கு 100 ரூபாய் வீதம் மொத்தம் 600 ரூபாய் கட்டிவிட்டு' செல்ல சொல்கிறார்.

ஆனால் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் உட்பட அனைவரும் ஹெல்மெட் வைத்திருப்பதாக எடுத்து காட்ட, 'சரி சரி 100 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள்' என அடாவடியாக கேட்டு வாங்குகிறார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அதில் இருக்கும் காவலர் மீது புகார் அளிக்க சமூக ஆர்வலர்கள் பலர், அவர் குறித்த தகவலை சேகரிக்கும் பணியில் இரங்கி இருக்கின்றனர்.

Disqus Comments
'