Friday, 13 September 2019

மணமகளுக்கு 'திக்குவாய்'... திருமணத்தை நிறுத்திய பெற்றோர்... மனதை வென்ற மணமகனின் மனிதாபிமானம்!!!


பெண்ணுக்கு திக்குவாய் என காரணம் கூறி திருமணத்தை பெற்றோர் கடைசி நேரத்தில் நிறுத்த முயன்றாலும், போராடி அதே பெண்ணையே மணந்து மக்களின் மனதை வென்றிருக்கிறார் வேலூரை சேர்ந்த வாலிபர்.

வேலூர் திப்பாசமுத்திரத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும், பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று காலை சேண்பாக்கத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் திருமணமும் நடைபெற இருந்தது.

நேற்று காலை 9 மணி அளவில் திருமணம் நிகழ இருந்த நிலையில், மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர், தங்களுக்கு பெண்ணுக்கு திக்குவாய் அதனால் பிடிக்கவில்லை என கூறி திருமணத்தை நிறுத்தினர்.

என்றாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை, இப்படியொரு அற்ப காரணத்தினால் கெடுத்துவிடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்த மணமகன், வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி, அப்பெண்ணை தனக்கு பிடித்திருப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனது முடிவை கூறினார்.

மணமகன்-மணமகள் உறுதியாக இருந்த நிலையில், காவல் துறையினர் அவர்களை பதிவு திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியதுடன். பெற்றோர்கள் தடங்கலாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினார்.     
Disqus Comments
'