Breaking News

"படமாகிய கார் வெடிக்கும் காட்சி" வேடிக்கை பார்க்கவந்த 'தாய்-மகள்' மரணம்.. பெங்களூரில் பரபரப்பு


பெங்களூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், வேடிக்கை பார்க்க வந்த, தாய் மற்றும் 5 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்காபுரா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில், சிரஞ்சீவி ஷார்ஜா, சேட்டன் நடிப்பில் உருவாகும் 'ரணம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள, ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் நடைபெற்றது.

அங்கு கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியே வந்த, 29 வயதான சுமேரா எனும் பெண் மற்றும் அவரது குழந்தைகள் அஹீரா, ஷெனாஸ் ஆகியோர் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நின்றிருந்தனர்.

திட்டப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் வெடிக்க வைக்கப்பட்டது, அந்த நிகழ்வின் போது, இரும்பு சிலிண்டர் ஒன்று படுவேகத்தில் பறந்து வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தாய் மகள்கள் மீது மோதியது.


இந்த கொடூர விபத்தில், தாய் சுமேரா மற்றும் 5வயது மகள் அஹீரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க,  ஷெனாஸ் மட்டும் முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இப்படியொரு அசம்பாவிதம் நடைபெற்ற நிலையில், உதவ கூட முன்வராமல் படக்குழு ஓட்டம்பிடித்து விட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து பேசிய டிசிபி கலா கிருஷ்ணஸ்வாமி, முறையான அனுமதி கூட வாங்காமல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் ரணம் படக்குழுவினர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.