Breaking News

எழுத்தாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்...? பாக்யராஜ் விளக்கம்


தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இந்நிலையில் அதனை காரணம் காட்டியே தற்பொழுது பதவி விலகி பலரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறார்.

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில், தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் அவர்களது பங்கு மிகப் பெரியது. பெரிய நிறுவனம், நெருங்கிய நடிகர் என்று பாராமல் நியாயத்தின் பக்கம் நின்றதானால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

அதே சமயம், விஜய் ரசிகர்களின் எதிர்ப்புகள் சங்க நிர்வாகிகள் ஒத்துழையாமை என பல இன்னல்களையும் சந்தித்தார். இந்நிலையில் இன்று திடீரென தான் பதவி விலகுவதாக அறிவித்த பாக்யராஜ் அவர்கள் அதன் காரணத்தினையும் மூன்று பக்க அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

அதன் சுருக்கம் இதோ, "நான் அனைத்து எழுத்தாளர் சங்க ஒப்புதலோடு போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்மையாக பணிபுரிந்து வந்தேன். அனைத்தும் நன்றாக போய் கொண்டிருந்த சமயத்தில் வந்த சர்கார் திரைப்பட பிரச்சனையில் பல இன்னல்களை சந்தித்தேன்.

அதற்கு முக்கிய காரணம் என்று நினைப்பது, நான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது தான்.   மேலும் சங்கத்தில் இருக்கும் சில ஒழுங்கீன நடவடிக்கைகளும் என் கவனத்துக்கு வந்தது. அதனை சரி செய்ய ஒரே வழி, நான் உட்பட அனைத்து தென்னிந்திய எழுத்தாளர் சங்க நிர்வாகிகளும்  ராஜினாமா செய்து, முறைப்படி தேர்தல் வைப்பது.

அதற்காகவே நான் ராஜினாமா செய்கிறேன். என் முடிவு சரி என நினைப்பவர்கள் ராஜினாமா செய்யுங்கள். நான் மீண்டும் தேர்தலில் நின்று, மெஜாரிட்டி ஓட்டுகளுடன் வென்று, தொடர்ந்து கடமையோடு செயல்படுகிறேன்.

மேலும் சர்கார் பட விவகாரத்தில் நான் முருகதாஸிடம் நான் எவ்வளவோ கெஞ்சினேன். அவர் உடன் பட வில்லை எனும் சூழ்நிலையில் அப்படத்தின் கதையை சொல்ல வேண்டியதாயிற்று. இருந்தாலும் என் தவறை உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிச்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார்.