Breaking News

சர்கார் டிக்கெட் கொள்ளை..! வாய் கொடுத்து சிக்கிய தமிழக முதல்வர்...!


'நீரின்றி அமையாது உலகு' என்பது போல, இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு சினிமாவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பலருக்கு பிரதான பொழுது போக்கே சினிமா தான் என்றாகிவிட்ட நிலையில் பல ஆயிரம் கொடுத்தும் திரைப்படங்களை பார்க்கவும் தயங்குவதில்லை ரசிகர்கள்.

ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக கொள்ளை விலைக்கு விற்கும் திரையரங்குகள் மேல் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. டிக்கெட் விலை இவ்வளவுதான் என தீர்மானம் எடுத்த நடிகர் சங்கமும் வந்தவரைக்கும் லாபம் என்ற நோக்கிலேயே இது போன்ற அதிக கட்டணங்களை வசூலிக்கும் திரையரங்குகள் பற்றி கண்டுகொள்வதில்லை.

இவர்கள் ஒருபுறம் இருக்க, அரசுக்கு அதுவும் தமிழக முதல்வருக்கும் இதை பற்றி தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. இது பற்றிய சூடான விவாதத்தை கிளப்பி விட்டுருக்கிறது நம் தமிழக முதல்வரின் சமீபத்திய உரை.

விஜய் நடித்து வெளிவந்த 'சர்கார்' திரைப்பட பிரச்சனை குறித்து சமீபத்தில் பேசிய, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம். கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது?ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்" என்றிருந்தார்.     

அதாவது சர்கார் படக்குழுவினரை விமர்சிப்பதாக அவர் கூறிய இந்த கருத்தானது, 'டிக்கெட் கொள்ளை நடப்பது பற்றி இத்தனை நாட்கள் தெரிந்திருந்தும் ஒரு முதல்வராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..?' என்ற குறுக்கு கேள்வியினை தமிழக மக்களை எழுப்ப வைத்திருக்கிறது.