Breaking News

"சொந்த செலவில் சூனியம்"...படத்தில் நடந்ததை நிஜத்திலும் நடக்க வைத்த அதிமுக


சர்கார் திரைப்படத்தில் தங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகளை நீக்க கோரி போராடி வென்றது ஆளும் கட்சியான அதிமுக. இதனை தங்களுக்கு கிடைத்த வெற்றி என அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் சமயத்தில், சைலண்டாக வெடித்திருக்கிறது ரியல் ஒரு விரல் புரட்சி.

A.R முருகதாஸ் இயக்கி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இதில் இடம் பெற்றிருந்த ஒரு விரல் புரட்சி எனும் பாடலில் அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

இதற்கு ஆளும் கட்சியிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில், விஜயின் பேனர்கள் பல்வேறு இடங்களில் 'அதிமுக'வினரால் கிழித்தெறியப்பட்டது. என்றாலும் விஜய் தரப்பில் ரசிகர்களை போராட்டங்கள் இன்றி அமைதி காக்க சொல்லி இருந்தால், நடப்பவற்றை விஜய் ரசிகர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.


இருப்பினும்ஒரு சில ரசிகர்கள் வித்யாசமான முறையில் அக்கட்சிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அதாவது இப்படியொறு சர்ச்சைக்கு காரணமான, ஒரு விரல் புரட்சி பாடலில் இடம்பெற்றதை போலவே, அரசு கொடுத்த இலவச பொருட்களை எரித்தும் நொறுக்கியும் வீடியோ பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்படி திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சியை  நிஜத்திலும் நிகழ வைத்து விட்டார்களே என சிரிப்பாய் சிரிக்கின்றன எதிர்க்கட்சிகள்.