Breaking News

"வெற்றியடைய கூடாதுன்னு ஒரு கூட்டம் உழைக்குது" தல ரசிகர்களை விமர்சித்தாரா தளபதி..?


தமிழ் சினிமாவில் எலியும், பூனையும் போன்றவர்கள் தல, தளபதி ரசிகர்கள். என்னதான் சம்பந்தப்பட்ட நடிகர்களான விஜய், அஜித்தே தங்களுக்குள் நட்பு பாராட்டி வந்தாலும், ரசிகர்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையானது, ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றொரு நடிகரின் படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் சம்பவங்களை சமூக வலைதளங்களில் தொடர் கதையாக்கி இருக்கிறது.

சமீபத்தில் கூட நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்தை சேர்ந்த "சிம்டான்காரன்" பாடலை கலாய்த்து அஜித் ரசிகர்கள் வெளியிட்ட மீம்ஸ் மற்றும் காணொளிகளினால் சமூக வலைத்தளங்கள் நிரம்பி வழிந்தன. இப்படி என்னதான் விஜய், அஜித் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லதாகவே இருந்தாலும், அதனை மட்டம் தட்டி பேச தவறுவதில்லை ரசிகர்கள். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற, சர்கார் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய ஒரு சில வரிகள், இப்படி எதிர்மறை விமர்சனங்களை பரப்பும் அஜித் ரசிகர்களை விமர்சிப்பது போல இருந்தது.

அதாவது, "வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானலும் உழைக்கலாம், ஆனா வெற்றியடைய கூடாதுன்னு ஒரு கூட்டம் கடுமையா உழைக்குது. இவர்களை போன்றவர்கள் இயற்கை, அனைவர் வாழ்விலும் உள்ளனர்" என நடிகர் விஜய் பேசி இருந்தார்.

தொடர்ந்து, "உசுப்பேத்துறவன்கிட்ட உம்ம்னுன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்" என்று விஜய் குறிப்பிட்ட வரிகள் இப்படிப்பட்ட எதிர்மறை விமர்சகர்களை தவிர்க்க தனது ரசிகர்களுக்கு வழங்கிய அறிவுரை போன்றும் இருந்தது.