Breaking News

கருணாகரன் Vs விஜய் ரசிகர்கள் மோதல் - என்னதான் காரணம்..?


சமூக வலைத்தளத்தில் சினிமா ரசிகர்கள் சண்டை போட துவங்கிய காலம் போய் தற்பொழுது பிரபலங்கள் ரசிகர்களுடன் சண்டை போட துவங்கிவிட்டனர். மீடியாக்களின் கவனத்தையும் பெரிய அளவில் கவரும் இத்தகைய சமூக வலைதள யுத்தத்தை, சமீபத்தில் நடத்தி வருகிறார் நடிகர் கருணாகரன்.

கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமாகி, சூது கவ்வும், ஜிகர்தண்டா படங்களின் மூலம் காமெடியனாக பிரபலமானவர் கருணாகரன். இவரது சமீபத்திய சமூக வலைதள பதிவுகள் அனைத்தும் நடிகர் விஜயையும், அவரது ரசிகர்களையும் விமர்சிக்கும் விதத்திலேயே இருந்து வருகிறது.

இதனால் விஜயின் ரசிகர்களும் அவரை தொடர்ந்து தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில்,' நடிகர் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும், இதனால் இன்று சென்னை கமிசனர் அலுவலகத்தில் இது குறித்து புகார் ஒன்றினை அளிக்க இருப்பதாகவும்' தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க வேலை நிறுத்தத்தின் போது, அனைத்து படப்பிடிப்புகளும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், விஜயின் சர்கார் திரைப்படம் மட்டும் உடனே நிறுத்தபடாமல் எடுக்கபட்டது.

இதனால் நடிகர் விஜயை கருணாகரன் ஆவேசமாக தாக்கி பேசியதே இந்த ரசிகர்கள் மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன் பின்னர் கருணாகரனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தாக்கி பேச, தற்பொழுது கமிசனர் அலுவலகம் வரை வந்திருக்கிறது இந்த பஞ்சாயத்து.