Breaking News

உறவினராலேயே பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன் ; திடுக்கிட வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நிவேதா பெத்துராஜ், தான் சிறு வயதில் அனுபவித்த பாலியல் கொடுமைகளைப் பற்றி சமீபத்தில் தன் ரசிகர்களுடன் பகிர்ந்திருந்து அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.

நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் டிக் டிக் டிக், பார்டி போன்ற படங்கள் விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன.


இந்நிலையில் இந்தியாவையை பரபரப்பாக்கிய சிறுமி ஆசிஃபா கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நிவேதா போன்ற நடிகைகள், இந்த பிரச்சனை குறித்து தீவிரமாக பேசி இருப்பது, ஒரு நடிகையாக பிறரை விட அதிகமாக அவர்கள் சந்திக்கும் பாலியல் வற்புறுத்தல்களின் வெளிப்பாடு என்றே பலரை பேச வைத்திருக்கிறது.

அப்படி சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்த நிவேதா பெத்துராஜும் ஒரு பெண்ணாக தான் 5 வயதிலேயே பாலியல் தீண்டலுக்கு ஆளானதாகவும், இத்தனைக்கும் இந்த குற்றங்களை செய்வது உறவினர்களும் நெருங்கியவர்களும் தான் எனவும் தெரிவித்திருந்தார்.

'அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகும் போது, விவரம் தெரியாத  குழந்தைகளுக்கு அதனை எவ்வாறு பெற்றோரிடம் சொல்வது என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அதனால் பெற்றோர்கள்தான் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஆண்கள் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பான சூழ்நிலையை அமைத்து தர முன்வர வேண்டும். வெறுமனே காவலர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது' எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.